காணொளி: குழந்தைத் திருமணத்தில் இருந்து சிறுமிகளை காத்த 'கால்பந்து'

காணொளிக் குறிப்பு, காணொளி: குழந்தைத் திருமணத்தில் இருந்து விடுதலை அளித்த கால்பந்து விளையாட்டு
காணொளி: குழந்தைத் திருமணத்தில் இருந்து சிறுமிகளை காத்த 'கால்பந்து'

இந்தியாவில் குழந்தை திருமணத்தால் லட்சக்கணக்கான பெண் குழந்தைகள் தங்கள் கனவுகளை தொடர முடியாமல் உள்ளனர். ஆனால், தங்களுடைய அறியப்படாத வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரவும், மற்றவர்களால் கவனிக்கப்படவும் இந்த குழந்தைகள் விளையாட்டை தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்கும்?

உனக்கு திருமணம் செய்ய போகிறோம் என முன்னாவிடம் சொன்ன போது அவருக்கு வயது வெறும் 14 மட்டுமே. இந்தியாவில் குழந்தைத் திருமணம் சட்டவிரோதமானது. ஆனால், 18 வயதுக்கு முன் 21.6 கோடி பெண்கள் மற்றும் சிறுமிகள் திருமணம் செய்யப்பட்டுள்ளதாக ஐநா மதிப்பிடுகிறது.

“நான் அழ தொடங்கினேன் .இப்போதே எனக்கு திருமணம் வேண்டாம். நான் 9ஆம் வகுப்பு தான் படிக்கிறேன். நான் படிக்க விரும்புகிறேன் என சொன்னேன்.” என்று கூறுகிறார் கால்பந்து வீராங்கனை முன்னா வைஷ்ணவ்.

முன்னாவின் அம்மாவுக்கும் குழந்தை பருவத்திலேயே திருமணம் நடந்தது. முன்னாவின் மூத்த சகோதரிக்கும் குழந்தைத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைத் திருமணங்களைத் தடுக்க அதிகாரிகள் முயல்கின்றனர். ஆனால், உள்ளூர் சமூகங்களிடமிருந்து போதிய ஒத்துழைப்பு கிடைப்பதில்லை என அவர்கள் கூறுகின்றனர்.

“பெண்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் மோசமான தாக்கங்களுக்கு உள்ளாகி, ஆண்களுடன் ஓடிவிடுவார்கள் என சிலர் சொல்கிறார்கள். அதனால், திருமணத்தை அமைதியாக நடத்திவிடுகிறோம். திருமண அழைப்பிதழ் அச்சிடுவதும் இல்லை, பந்தலும் அமைப்பதில்லை” என்கிறார் முன்னாவின் தாய் லாலி வைஷ்ணவ்.

முன்னாவுக்கும் குழந்தை திருமணம் நடந்திருக்க வேண்டியது, ஆனால் பெண்களின் உரிமைகளுக்காக செயல்படும் ஓர் அமைப்பு அவருக்கு கால்பந்து விளையாட்டை அறிமுகப்படுத்தியது. ‘Football for Freedom’ என்ற திட்டத்தின் மூலம், கடந்த பத்து ஆண்டுகளில் ராஜஸ்தானின் 13 கிராமங்களில் 800-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டை மட்டுமல்ல, அதைத் தாண்டியும் இவர்களுக்கு நிறைய கற்றுத்தந்துள்ளது.

“இந்த பெண்களுடன் நாங்கள் இணைந்து வேலை செய்தபோது, அவர்கள் தங்களுடைய உரிமைகள், நாட்டின் அரசமைப்பு, குழந்தைத் திருமணத்தின் பாதிப்புகள் ஆகியவற்றை தெரிந்து கொண்டார்கள். வீட்டை விட்டு வெளியே வர தொடங்கியதால், அவர்களால் குரல் எழுப்ப முடிந்தது” என்கிறார் பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் பத்மா ஜோஷி.

கால்பந்து விளையாடுவதன் மூலம் கிடைக்கும் அனுபவம், போட்டிகளுக்காக பயணம் செய்வது, தங்களுடைய உரிமைகள் பற்றி அறிவது ஆகியவை பெண்களுக்கு வலிமை அளிக்கக்கூடியதாக உள்ளது. முன்னா இந்த சூழலை எதிர்த்து போராடியது அவரது 15 வயது இளைய சகோதரிக்கு தற்போது உதவியாக உள்ளது.

“ஒரு நாள், வீட்டுப்பணிகளை முடித்துவிட்டு விளையாட போகும்போது, உன் காதலன் அங்கே காத்திருக்கிறானா என அப்பா கேட்டார். அதற்கு நான், எனக்கு காதலன் இல்லை. நான் கால்பந்து விளையாடப் போகிறேன். அதுதான் என் காதல் என்று சொன்னேன்” என்கிறார் முன்னாவின் சகோதரி நிஷா வைஷ்ணவ்.

கால்பந்து, குழந்தைத் திருமணத்திலிருந்து தப்பிக்க முன்னாவுக்கு உதவியது. தற்போது, இவர் பயிற்சியாளராக உள்ளார். விளையாட்டின் மூலம் மற்ற குழந்தைகளும் சுதந்திரம் பெற உதவுவதே இவரது நோக்கமாக உள்ளது.

“இந்தப் பெண்களை வெளியே கொண்டு வர வேண்டும் என நினைக்கிறேன். அவர்களின் திருமணத்தைத் தடுக்க முடிகிறதோ இல்லையோ, அவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒன்று மாறி, தங்களுடைய கனவுகளை உணர உதவ வேண்டும்” என்கிறார் கால்பந்து வீராங்கனை முன்னா வைஷ்ணவ்.

இந்தப் பெண்கள் தங்களுடைய கால்பந்து சாதனைகளை கொண்டாடுகிறார்கள். ஆனால், வறுமை அல்லது இளம் வயது திருமணம் போன்ற காரணங்களால் இந்தியாவில் பல பெண் குழந்தைகளுக்கு விளையாட்டு எட்டாத ஒன்றாகவே உள்ளது. ஆனால், முன்னாவும் இந்தப் பெண்களும் மைதானத்துக்குள் அடியெடுத்து வைத்து, தங்கள் வாழ்க்கையை மாற்ற அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு